உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கடையுடன் கூடிய வீடுகள் வரி செலுத்த... உத்தரவு!   வருவாயை பெருக்க மாநகராட்சி நடவடிக்கை

 கடையுடன் கூடிய வீடுகள் வரி செலுத்த... உத்தரவு!   வருவாயை பெருக்க மாநகராட்சி நடவடிக்கை

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாநகராட்சியில், வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்தி வந்த, 1,667 பேருக்கு, 1.23 கோடி ரூபாய் வரி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து, வரி விதிக்கும் நடவடிக்கை வாயிலாக, 5.34 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என, ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவ்வாறு, ஏழு வகையான வரி இனங்கள் வாயிலாக, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய்க்கும் மேல் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.நகரவாசிகள் வரி இனங்களை செலுத்துவதில் மெத்தனமாக இருப்பதால், மாநகராட்சிக்கு வரவேண்டிய வருமானம் ஆண்டுதோறும் போதிய அளவில் கிடைக்காமல் போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.சொத்து வரி போல், பிற வகையான வரி இனங்களையும், நகரவாசிகளிடம்இருந்து தீவிரமாக வசூலித்தால், மாநகராட்சிக்கு தேவையான திட்டங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், வரி செலுத்துவதில் உள்ள சுணக்கம் காரணமாக,போதிய வருவாய் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.வரி செலுத்தும்இனங்களில், அதிகபட்சமாக சொத்து வரி வாயிலாகஅதிக வருவாய் மாநகராட்சிக்கு கிடைக்கிறது. அதாவது, சொத்து வரி வாயிலாக மட்டும், 21 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஆனால், வரி முழுமையாக செலுத்தாததால், 10 சதவீத தொகை ஆண்டுதோறும் நிலுவையாக நீடிக்கிறது.சொத்து வரி நிலுவை மட்டுமல்லாமல், வரி செலுத்துவதில் மாநகராட்சியை பலர் ஏமாற்றி வருகின்றனர். அதிக பரப்பிலான கட்டடங்கள், வீட்டுமனைகளுக்கும், வணிக கட்டடங்களுக்கும் குறைவான இடமாக கணக்கு காட்டி வரியை செலுத்துகின்றனர்.இதனால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. மாநகராட்சி கூட்டத்திலும், கவுன்சிலர்கள் பலர் இப்பிரச்னையை எழுப்பினர். இதையடுத்து, மாநகராட்சி எல்லைக்குள் வணிக ரீதியிலான, 4,497 மின் இணைப்புவிபரங்களை, மின்வாரியத்திடம் மாநகராட்சி அதிகாரிகள் பெற்றனர்.அதை வைத்து, மாநகராட்சி பில் கலெக்டர்கள் வாயிலாக கள ஆய்வு செய்து, அவர்களின் வணிக விபரங்கள், வியாபாரம், கட்டடத்தின் அளவு, வரி விபரம் போன்றவற்றை சேகரிக்க கமிஷனர் நவேந்திரன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பில் கலெக்டர்கள், வணிக மின் இணைப்பு பெற்ற கட்ட டங்களை கள ஆய்வு செய்து விசாரித்தனர்.அதில் பல கட்டடங்கள், குடியிருப்பு வகையில் சொத்து வரி செலுத்தியது தெரியவந்தது. அந்த கட்டடத்தில் நடைபெறும் வணிகம் வாயிலாக, அதன் உரிமையாளர்கள் தொழில் வரி, வருமான வரி, ஜி.எஸ்.டி., என சகல வரவு - செலவுகளையும் பார்த்து வந்தனர்.ஆனால், மாநகராட்சிக்கு வணிக ரீதியிலான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட 1,667 கட்டடங்களுக்கு, வணிகத்திற்கான சொத்து வரி விதிக்க, 1.23 கோடி ரூபாய்க்கு, 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், அதிக பரப்பளவு கொண்ட கட்டடங்களை குறைவான இடமாக கணக்கு காட்டி வரி செலுத்திய கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு, 2,379 கட்டடங்களுக்கு உரிய பரப்பளவுக்கான வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 84லட்சம் ரூபாய் கூடுதலாக வரி கிடைக்கும்.சொத்து வரி விதிக்கப்படாமல் இருந்த கட்டடங்களுக்கு சொத்து வரி விதித்த காரணத்தால், 2.1 கோடி ரூபாயும், புதியகட்டடங்களுக்கு புதிதாகவரி விதிப்பதன்வாயிலாக, 1.17 கோடி ரூபாய் என, மொத்தம் 5.34 கோடி ரூபாய்,மாநகராட்சிக்கு கூடுதலாக வருமானம் கிடைக்க இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் கூறியதாவது:குடியிருப்பு வகைப்பாட்டில் உள்ள பல கட்டடங்கள் வணிக ரீதியில் செயல்பட்டு வந்தன. அதனால், மின்வாரியத்திடம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்து, 1,000க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களுக்கு, உரிய வணிக ரீதியிலானவரியை செலுத்தகூறியுள்ளோம்.அதுமட்டுமல்லாமல், குறைவான சதுரடிக்கு வரி செலுத்தியவர்களுக்கும் உரிய வரி செலுத்த கேட்டுள்ளோம். இதன் வாயிலாக 5 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.கட்டடங்கள் மீது அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள 49 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.அனுமதி பெற விண்ணப்பித்தால், கட்டணம் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.இதன் வாயிலாக 10 லட்சம் ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி பெறாத பதாகைகள் அகற்றப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ