மது அருந்துவதை கண்டித்த ஆத்திரம் மனைவியை கொன்ற கணவர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, மது அருந்துவதை கண்டித்த மனைவியை ஆத்திரத்தில் அடித்து கொன்ற கணவர், கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 38; இவர், மனைவி ராதிகா, 32. மற்றும் 9 வயது மகனுடன் வசித்து வந்தார்.பச்சையப்பன், கூரம் கேட்டில், டூ - வீலர் பழுது பார்க்கும் தொழில் நடத்தி வரும் நிலையில், மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், ஏற்கனவே மனைவிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி சிறு பிரச்னைகள் ஏற்பட்டன.மேலும், குடும்பத்துக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் சொத்தை பிரிப்பதிலும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பச்சையப்பன், உணவு கேட்டுள்ளார்.அப்போது, மனைவி ராதிகா உணவு கொடுக்காமல் வாக்குவாதம் செய்துள்ளார்.இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, ராதிகாவை கன்னத்தில் அறைந்து, அவரின் தலையை சுவரில் முட்டியுள்ளார்.இதனால், தலையில் காயமடைந்த ராதிகா மயக்கமடைந்தார். உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், ராதிகா இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, பொன்னேரிக்கரை போலீசார், ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பச்சையப்பனை கைது செய்தனர்.