குடும்பத்தோடு வந்தால் வாடகை வீடு கிடைக்கலை... எங்கே போறது?:தாராள பணம் தரும் பேச்சுலர்களுக்கு முன்னுரிமை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் நிறைந்த வாலாஜாபாத் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், வீட்டு உரிமையாளர்களுக்கு, தாராளமாக வாடகை தருவதால், 'பேச்சுலர்'களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். குடும்பத்தினரோடு வருவோரை புறக்கணிப்பதால், 'நாங்க எங்கே போறது' என தெரியாமல் வீடு தேடி அலைகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், பிள்ளைச்சத்திரம், வல்லம், திருமுடிவாக்கம், வாலாஜாபாத், படப்பை ஆகிய பகுதிகளில், 10,980 ஏக்கர் பரப்பளவில், 210 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 4.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில், வட மாநிலங்களான பீஹார், ஹரியானா, அசாம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வாடகை வீடுகளில் தங்கி தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து, தனியார் தொழிற்சாலை அருகே தங்கி, வேலை செய்வோர்களுக்கு, சவுகரியமாக, தனியார் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் கிராமங்களில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். தனி நபர் ஒருவருக்கு, 1,500 - 2,000 ரூபாய் வரையில், நகரத்திற்கு ஏற்ப வாடகை கொடுத்து, ஒரே வீட்டில் குழுவாக தங்கிக் கொள்ள வேண்டி உள்ளது. இங்கு, துாங்குவதற்கும், குளிப்பதற்கும் மட்டுமே வாடகை வீட்டை உபயோகப்படுத்துகின்றனர். இங்கு, சமையல் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக, வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆந்திர மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை வருகை அதிகரித்துள்ளது. இதனால், கிராமம் மற்றும் பிரதான நகரங்களில், தனி குடித்தனம் நடத்த வரும் புதுமன தம்பதியினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதவிர, வேலை நிமித்தமாக இடமாறுதல் செய்வோருக்கு, வாடகை வீடு பெரும் சவாலாக இருக்கிறது. உதாரணமாக, நான்கு பேர் அடங்கிய, ஒரு குடும்பத்திற்கு, 5,000 ரூபாய்க்கு வாடகை வீடு எடுத்து தங்கிக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. தற்போது, வட மாநில தொழிலாளர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், நான்கு, ஐந்து பேர் ஒன்றாக தங்கி, 10,000 ரூபாய்க்கு மேல் வாடகை தருவதால், குடும்பத்தினருக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. இதுகுறித்து, வாலாஜாபாத் நகரத்தைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தனி குடித்தனம் நடத்துவோருக்கு, வீடு வாடகைக்கு விட்டால், ஒரு படுக்கை வீட்டை, குடும்பத்திற்கு விட்டால் அதிகபட்சமாக, 5,000 ரூபாய் கிடைக்கும். அதே வீட்டை, 'பேச்சுலர்'களாக உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேரை தங்க வைத்தால், 10,000 ரூபாய் வாடகை கிடைக்கிறது. ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடகை கூடுதலாக கிடைக்கும். உரிமையாளர்களுக்கு பெரிதாக எந்த செலவும் இல்லை. அதிக வருவாய் கிடைப்பதால், 'பேச்சுலர்'களுக்கே முன்னுரிமை தருகிறோம்; குடும்பத்தோடு வருவோருக்கு முன்னுரிமை தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பணி இடமாறுதலில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதிற்கு வந்தோம். வாடகைக்கு வீடு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் வீடு கிடைத்தாலும், அதிக வாடகை கேட்கின்றனர். காரணம், 'பேச்சுலர்' ஒருவருக்கு, 2,000 ரூபாய் கொடுக்கின்றனர்; நாங்கள் கூறும் வாடகை குறைவுதான் என்கின்றனர். - நா.சோமசுந்தரம், குடும்பத் தலைவர், ஈரோடு. எங்களுக்கு தனியார் தொழிற்சாலையில் உணவு, சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து வித வசதிகள் கிடைக்கிறது. தங்கும் இடம் மட்டும் சவுகரியமாக இருப்பதில்லை. அனைத்து வசதியுடன் கூடிய வீடுகளில் தங்குகிறோம். நான்கு, ஐந்து பேர் ஒன்றாக வீடு எடுத்து தங்கி உள்ளோம். வாடகையை நாங்கள் பகிர்ந்து கொள்வதால், பெரிய செலவாக தெரிவதில்லை. - சு.நவீன், தனியார் தொழிற்சாலை ஊழியர், ஸ்ரீபெரும்புதுார்.