விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் அலுவலக பொருட்கள் ஜப்தி
காஞ்சிபுரம்,:விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, காஞ்சிபுரம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தின் பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். காஞ்சிபுரம், பாலுச்செட்டிச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். காப்பீடு இவர், 1999ல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நடந்து சென்றபோது, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில், காப்பீடு செய்யப்பட்ட கார், அவர் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், இழப்பீடு கேட்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில், அவருக்கு, 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த இழப்பீடு குறைவு என, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். கடந்த, 2019ல், இவரது மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குமரவேலுக்கு, 1.20 லட்சம் ரூபாய், 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வழங்காததால், காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில், நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். உத்தரவு இழப்பீடு தொகையை வழங்காததால், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மண்டல அலுவலகத்தை ஜப்தி செய்ய, சார்பு நீதிபதி அருண்சபாபதி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தின் மேஜை, நாற்காலி, கணினி போன்ற பொருட்களை நேற்று ஜப்தி செய்தனர்.