காஞ்சியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சாமந்திபுரம், கூரம், வதியூர், தக்கோலம், சிறுவாக்கம், புரிசை, புள்ளலுார், மூலப்பட்டு, மணியாச்சி உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரத்திற்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது.தை மாத முகூர்த்த தினமான இன்று திருமணம், வீடு கிரஹபிரவேசம், வளைகாப்பு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதால், மல்லிகைப்பூ தேவை அதிகரித்துள்ளது.இருப்பினும், தேவைக்கேற்ப வரத்து இல்லாததால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் நேற்று கிலோ மல்லிகைப்பூ 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை அதிகரித்தாலும், மல்லிகைப்பூ கிடைத்தால் போதும் என, பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.