உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டைம் கீப்பர் அலுவலகம் திறப்பு காஞ்சி பஸ் பயணியர் மகிழ்ச்சி

டைம் கீப்பர் அலுவலகம் திறப்பு காஞ்சி பஸ் பயணியர் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர், செய்யாறு, மதுராந்தகம் செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில், நகர பேருந்துகளுக்கான 'டைம் கீப்பர்' எனப்படும் நேரகாப்பாளர் அலுவலகம், தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்'கில் இயங்கி வந்தது.காஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம் குறித்து பயணியர் அறிந்து வந்தனர்.இந்நிலையில், தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்' கூரையிலும், அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு, மழை நேரங்களில் ஒழுகியதால், ஆவணங்கள் நனைந்து சேதமாகின. இதனால், சீரமைப்பு பணிக்காக பேருந்து நிலைய பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், இரு மாதங்களுக்கு மேலாகியும் சீரமைப்பு பணி முடியவில்லை. இதனால், நகர பேருந்து குறித்த விபரம் அறியவரும் பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே, டைம் கீப்பர் அலுவலக பங்கை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த 28ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் சார்பில், சீரமைக்கப்பட்ட நகர பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம், மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த பயணியர், நகர பேருந்து இயக்கம் குறித்து டைம் கீப்பர் அலுவலகத்தில் விபரத்தை அறிந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !