அக்டோபரில் காஞ்சியில் 29.2 செ.மீ., மழை பதிவு இயல்பை காட்டிலும் 61 சதவீதம் அதிகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் மாதத்தில் பொழிய வேண்டிய 18.1 செ.மீ., மழையை காட்டிலும், 61 சதவீதம் கூடுதலாக, 29.2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் துவக்கத்திலேயே பெய்ய துவங்கியது. அதைத் தொடர்ந்து, 15ம் தேதிக்கு பின், தொடர் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை அதிகம் பொழியும் மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 நாட்களாக தொடர் மழை பெய்த காரணத்தால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. ஆறுகள் , ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பின. தொடர் மழை காரணமாக, விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். வானிலை ஆய்வு மைய தகவலின்படி, வடகிழக்கு பருவமழை பொழியும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59.1 செ.மீ., மழை சராசரியாக பொழிய வேண்டும். ஆனால், அக் டோபர் மாதத்திலேயே, 29.2 செ.மீ., மழை பொழிந்துள்ளது. அக்டோபர் மாதம் இயல்பாக 18.1 செ.மீ., மழை பொழிய வேண்டும். ஆனால், 61 சதவீதம் கூடுதலாக அக்டோபர் மாதம் மழை பொழிந்துள்ளது தெரிய வந்துள்ளது.