மாநகராட்சி விரிவாக்கத்தில் காஞ்சிபுரம் இல்லை...வரவேற்பு! : சுற்றியுள்ள 11 கிராம ஊராட்சி மக்கள் நிம்மதி
காஞ்சிபுரம்:தமிழகத்தில் 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி இடம் பெறவில்லை. இதனால், மாநகராட்சியை சுற்றியுள்ள 11 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்தில், 25 மாநகராட்சிகள் உள்ளன. இதில், கடந்த 3 ஆண்டுகளில் காஞ்சிபுரம், கடலுார், திண்டுக்கல், கரூர் போன்ற மாநகராட்சிகள் உருவாகின. மாநகராட்சி இல்லாத மாவட்டங்களிலும், உள்ளாட்சி விதிகளை தளர்த்தி மாநகராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், நகரமயமாதல் காரணமாக, தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதன் மூலம், மாநகராட்சி எல்லைகள் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல், புதிதாக 13 நகராட்சிகளும், 25 பேரூராட்சிகள் உருவாகியுள்ளது.எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள 16 மாநகராட்சிகளின் பட்டியலில், காஞ்சிபுரம் மாநகராட்சி இடம் பெறாததால், காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.காஞ்சிபுரம் சுற்றியுள்ள கோனேரிக்குப்பம், ஏனாத்துார், சிறுகாவேரிப்பாக்கம், திருப்பருத்திக்குன்றம், கீழ்கதிர்பூர், கருப்படைத்தட்டடை, திம்மசமுத்திரம், கீழம்பி, புத்தேரி, களியனுார், வையாவூர் ஆகிய 11 ஊராட்சிகள், காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க, நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டிருந்தது.ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க, கிராம ஊராட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கலெக்டர் அலுவலகம் அருகே சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தை கிராம மக்கள் நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், காஞ்சிபுரம் மாநகராட்சி தவிர, 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியுடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தேனம்பாக்கம், ஓரிக்கை, நத்தப்பேட்டை ஆகிய மூன்று ஊராட்சிகளும், செவிலிமேடு பேரூராட்சியும் இணைந்தது. இந்த பகுதியில் இன்று வரை போதிய அடிப்படை வசதிகள் இன்று வரை கிடைக்கவில்லை. பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் இப்போது தான் செயல்படுத்தப்படுகிறது. மழைநீர் வடிகால், சாலை, மின் விளக்கு போன்ற அடிப்படையான தேவைகளே இன்னமும் பூர்த்தியாகாத நிலையில், கூடுதலாக 11 ஊராட்சிகளை இணைத்தால், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியுமா என்ற கேள்விகளை நகரவாசிகள் எழுப்பி வந்தனர். அதற்கேற்றாற் போல், ஊராட்சிகளை இணைக்கும் அறிவிப்பு வெளியாகவில்லை.மாநகராட்சியை காட்டிலும் ஊராட்சிக்கு வரி குறைவு என்பதால், மாநகராட்சியுடன் இணைவதை பலரும் விரும்பவில்லை.மாநகராட்சியுடன் இணைந்தால், சொத்து வரி உள்ளிட்ட பல வகையான வரிகளை கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது எனவும், கிராமத்தில் உள்ள பெண்கள், முதியோருக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம் பாதிக்கும் என்கின்றனர். வீடு கட்டும் திட்டம், கால்நடை திட்டங்கள், வேளாண் திட்டங்கள் என பல வகையான திட்டங்களுக்கு கிராம ஊராட்சியாக இருந்தால், மானியம், சலுகை போன்றவை கிடைக்கும்.ஊராட்சி தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப, அனுமதியற்ற கட்டுமானங்கள் வரும். மாநகராட்சியாக இருந்தால் வீடு கட்டவும், வணிக ரீதியாகவும் கட்டடம் கட்டவும் அனுமதி பெற வேண்டும்.