நிலையம் திறந்தும் நெல் கொள்முதல் செய்யாத அவலம் கரும்பாக்கம் விவசாயிகள் கவலை
கரும்பாக்கம்:கரும்பாக்கம் மற்றும் களியப்பேட்டையில், நெல் கொள்முதல் நிலையம் திறந்து எட்டு நாட்களாகியும், இதுவரை நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடையான நெல்லை அப்பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். இதனிடையே, கடந்த 26ம் தேதி, இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்தார். எனினும் திறப்பு விழா மட்டுமே நடந்ததே தவிர இதுவரை நெல் கொள்முதல் துவங்கப்படவில்லை. இதனால், குவித்து வைத்துள்ள நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க விவசாயிகள் இரவும், பகலும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், காய்ச்சல் அதிகரிப்பால் நெல் எடை இழப்பு ஏற்படும் எனவும் கவலையில் உள்ளனர். இதேபோன்று, களியப்பேட்டை கிராமத்திலும் நெல்கொள்முதல் நிலையம் திறந்து எட்டு நாட்களாக இதுவரை நெல் எடுக்காததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, களியப்பேட்டை விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இயக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில், கலெக்டர் கலைச்செல்வி அனுமதி அளித்தார். அதை தொடர்ந்து, கடந்த 26ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், இதுவரை நெல் எடுக்கவில்லை. ஒரு மாதமாக இக்கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்துள்ளோம். மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் மழை பெய்வதால் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, நெல் கொள்முதல் பணியை உடனடியாக துவக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.