கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை * வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த, 4 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில், பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் என்கிற சரவணன்; வழக்கறிஞர். இவருக்கும், மனைவி ஜெயந்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017ல் பிரிந்து வாழ்ந்தனர்.சரவணன் வீட்டில், அரக்கோணத்தைச் சேர்ந்த ஆஷாராணி, 32, என்பவர், வீட்ட வேலைகளை செய்து வந்தார். சரவணனுக்கும், வேலைக்கார பெண்ணான ஆஷாராணிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.இதனால், சரவணனின் சொத்தை அபகரிக்கவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அவரது ஒரே மகள் கோஷினி, 4, என்பவரை, கொலை செய்யவும் ஆஷாராணி திட்டமிட்டுள்ளார்.கடந்த 2017ல், சரவணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து, ஆஷாராணி கொலை செய்துள்ளார்.குன்றத்துார் போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும், சொத்துக்களை அடைய தடையாக இருப்பார் என்பதாலும், சிறுமியை கொலை செய்ததை ஆஷாராணி ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக சசிரேகா வாதாடினார். விசாரணை முடிந்த நிலையில், ஆஷாராணி குற்றவாளி என, நீதிபதி செம்மல் நேற்று தீர்ப்பளித்தார். சிறுமியை கொலை செய்த பிரிவில் ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதம்; தடயங்களை அழித்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இரு பிரிவுகளுக்கான தண்டனைகளை, ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.