புனித பயணம் சென்று திரும்பிய மலேஷிய பயணி வானில் உயிரிழப்பு
சென்னை:ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், 'ஓமன் ஏர்லைன்ஸ்' விமானம், 240 பேருடன் நேற்று மஸ்கட்டில் இருந்து புறப்பட்டது.சென்னை வான் வெளியை விமானம் நெருங்கிய வேளை, விமானத்தில் இருந்த மலேஷியா நாட்டை சேர்ந்த பெண் பயணி காலிஜா, 41, என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. விமானி வேண்டுகோளுக்கு இணங்க, சென்னை விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனுமதி அளித்தனர். விமானம் மதியம் 2:40 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது.அங்கு காத்திருந்த அதிகாரிகள், அவரை பரிசோதித்தபோது, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குடியுரிமை சட்டத்தின்படி உள்ள நடைமுறைகள் முடிக்கப்பட்டு, அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அவரது கணவர் அபுபக்கருக்கு தற்காலிக 'விசா' வழங்கப்பட்டு, சென்னையில் உள்ள மலேஷியா துாதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சென்னை விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். பின் விமானம், மற்ற பயணியருடன் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது.அபூபக்கர், அவரது மனைவி காலிஜாவுடன் ஒரு குழுவாக, மதினாவுக்கு, உம்ரா புனித பயணம் மேற்கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.