பெருங்களத்துாரில் சிக்கன் சாப்பிட்ட மே.வங்க நபர் பலி; ஒருவர் சீரியஸ்
பெருங்களத்துார், சிக்கன் சாப்பிட்டு, வாந்தி பேதியால் அவதிப்பட்ட மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பெருங்களத்துார் அடுத்த வெங்கம்பாக்கம், எவர் கிரீன் 13வது குறுக்கு தெருவில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்கி, பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, நான்கு பேரும் அருகே உள்ள கடையில் சிக்கன் வாங்கி, சமைத்து சாப்பிட்டுள்ளனர். சற்று நேரத்தில், ஹைதர் அலி, 50, அஸ்தர், 35, ஆகிய இருவருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வாந்தி, பேதியாகி உள்ளது.இரவு முழுதும் வாந்தி, பேதியால் அவதிப்பட்ட இருவரும், மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளனர். நேற்று காலை பணிக்கு வந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், ஹைதர் அலி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆபத்தான நிலையில், மயக்கத்தில் இருந்த அஸ்தரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.