| ADDED : டிச 28, 2025 05:34 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ரேஷன் கடையில் டீத்துாள், சலவைத்துாள் உள்ளிட்ட 'எக்ஸ்ட்ரா' பொருட்கள் பெற கட்டாயப்படுத்துவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சியில், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், கால்நடை மருந்தகம் அருகே நியாயவிலை கடை செயல்படுகிறது. இந்த கடையில், சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த 740 குடும்ப அட்டைதாரர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இப்பகுதி ரேஷன் கடையில் மாதந்தோறும் வழங்கும் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்புடன் சேர்த்து கூடுதலாக டீத்துாள், சலவைத்துாள், சோப்பு உள்ளிட்டவை கட்டாயப்படுத்தி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வழக்கமாக ரேஷன் கடையில்,சர்க்கரை, துவரை, பாமாயில் ஆகிய பொருட்களுக்கு 105 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், டீத்துாள் உள்ளிட்ட பொருள்கள் தேவையில்லாமல் நிர்பந்தத்தின் பேரில் வழங்கப்பட்டு, கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால்,வழக்கம் போல ரேஷன் கடைக்கு பணம் எடுத்து வந்து கூடுதல் பணத் தேவைக்கு அவதிப்படும் நிலை உள்ளதாகவும் இத்தகையை செயலை தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அக்கடையில் பணியாற்றும் விற் பனையாளர் கூறியதாவது: கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து ரேஷன் கடைக்கு அனுப்பும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்கிறோம். பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு மீதி பணம் தர சில்லறை இல்லாத பட்சத்தில் அவர்கள் விருப்பத்தின் பேரில் அப்பணத்திற்கு ஏற்ப ஏதாவது பொருள் சில சமயங்களில் வழங்கப்படுகிறது. கட்டாயப்படுத்தி ரேஷன் பொருட்கள் எதுவும் தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.