ஜவுளி துறைக்கு காஞ்சியில் அலுவலகம் இல்லாததால் அவதி அரசு திட்டம் பற்றி உற்பத்தியாளர்கள் அறிவதில் சிக்கல்
காஞ்சிபுரம்:பட்டு சேலைகள், ஜவுளி ரகங்கள் உற்பத்தி மற்றும் வியாபாரம் நடக்கும் நிலையில், ஜவுளி துறைக்கான அலுவலகம் காஞ்சிபுரத்தில் இல்லாததால், அரசு திட்டங்கள், மானியங்கள் குறித்து, ஜவுளி உற்பத்தியாளர்களால் அறிய முடியாத நிலை உள்ளது. கைத்தறி பட்டு சேலைக்கு புகழ் பெற்றது காஞ்சிபுரம் நகரம். அதேசமயம், ஆடைகள் உற்பத்தி, விற்பனைக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு சந்தேகங்கள் கைத்தறி வளர்ச்சி திட்டங்களுக்கு, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் துணை இயக்குநர் அலுவலகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால், ஜவுளித்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகளுக்கு, காஞ்சி புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம் இல்லை. கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கைத்தறி மற்றும் துணிநுால் என்ற பெயருடன் ஒரே துறையாக இருந்த இத்துறையை, இரண்டாக பிரித்து, கைத்தறி துறை தனியாகவும், துணி நுால் துறை தனியாகவும் செயல்பட்டு வருகிறது. தனித்தனி இயக்குநர்கள் செயல்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் ஜவுளி துறைக்கு அரசு அலுவலகம் துவங்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜவுளி தொழில் துவங்குவது, மேம்படுத்துவது, ஜவுளித்துறையில் உள்ள அரசு திட்டங்கள், திறன் பயிற்சிகள், அரசு மானியம் என, பல்வேறு சந்தேகங்களை கேட்பதற்கு, காஞ்சிபுரத்தில் அலுவலகம் இல்லை. காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பும் செயல் பாட்டிற்கு வரவில்லை. கோரிக்கை காஞ்சிபுரத்தில், ஜவுளி தொழில் பல கோடி ரூபாய்க்கு நடக்கிறது. லுங்கி, சேலை மற்றும் பிற வகையான ஜவுளி பொருட்களும் உற்பத்தியாகும் நிலையில், ஜவுளி துறைக்கு அரசு அலுவலகம் இல்லாமல் உள்ளது. சென்னை அல்லது சேலம் பகுதிகளில் இயங்கும் ஜவுளித்துறை அலுவலகங்களை நாட வேண்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால், காஞ்சி புரம் மாவட்டத்தில், ஜவுளித்துறை சார்பில் அரசு அலுவலகம் துவக்க, அமைச்சர் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.