உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் பகல் நேரங்களிலும் கொசு தொல்லை அதிகரிப்பு

வாலாஜாபாதில் பகல் நேரங்களிலும் கொசு தொல்லை அதிகரிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், பகல் நேரங்களிலும் கொசு தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் உள்ள குடியிருப்பு மக்கள், சில நாட்களாக கொசு தொல்லை அதிகரிப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த நாட்களில் இரவு நேரங்களில் மட்டுமே இருந்த கொசு தொந்தரவு தற்போது பகல் நேரங்களிலும் தொடர்வதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கோபால் நாயுடு தெரு மக்கள் கூறியதாவது: பருவ மழை துவங்குவதற்கு முன்னதாகவே கொசு தொல்லை துவங்கி விட்டது. பேரூராட்சி சார்பில் ஆரம்பத்தில் கொசு ஒழிப்பு மருந்து ஏதும் தெளிக்காமல் சமீபத்தில் ஒரு நாள் மட்டும் தெளித்தனர். எனினும், அது கொசுவை கட்டுப்படுத்துவதாக இல்லை. இரவு நேரம் மட்டுமின்றி தற்போது பகல் நேரங்களிலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, வாலாஜாபாத்தில் கொசு அதிகரிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் அகற்றுதல், குப்பைகள் அப்புறப்படுத்துதல், தேக்கமான மழைநீர் வெளியேற்றுதல், புகை மருந்து அடித்தல் போன்ற சுகாதாரப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த பொது மக்களும் தங்களது வீடுகளை சுற்றி மழைநீர் அகற்றுதல், பழைய டயர்கள், தொட்டிகள்,செடிகளை அகற்றி குப்பை தேங்காமல் பராமரித்தல் போன்ற பணிகளை மழைக்காலத்தில் மேற்கொள்வது அவசியம். பேரூராட்சி சார்பில் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !