வெங்காடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதுார்:ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ள வெங்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வெங்காடு ஊராட்சி உள்ளது. இப்பகுதி மக்கள் வெங்காடு பிரதான சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர்.பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவின் ஒரு பகுதியாக உள்ள வெங்காடு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.வெங்காடு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வெங்காடு சாலை வழியே சென்று வருகின்றன.கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை மாறியுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையினால், வெங்காடு சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது.குண்டும் குழியுமான சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், பல்லாங்குழியான சாலையில் செல்லும் போது, நிலைத்தடுமாறி இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்வதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ள வெங்காடு சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் வெங்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.