கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன.தவிர, வல்லக்கோட்டை, மாத்துார், வல்லம், போந்துார், சென்னக்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மேல் தளத்தில், பல டன் எடைக்கொண்ட இரும்பு சட்டங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விபத்து அச்சம்
இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், பலத்த காற்று வீசும் போது, கட்டடங்களின் மீது உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது.சமீபத்தில் ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதில், வல்லக்கோட்டை பகுதியில் கட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் காற்றில் கிழிந்து தொங்கி வருகிறது.சாலையோரம் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ள விளம்பர பேனரால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையோரம் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொடி கம்பம் அகற்றம்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் நடப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மத ரீதியிலான கொடி கம்பங்களை, ஜன. 27ம் தேதிக்குள் அகற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மாவட்ட, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள் தாமே முன் வந்து கொடி கம்பங்களை, 15 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், கட்சியினர் கொடி கம்பங்களை அகற்ற முன்வராமல் இருந்ததால், உத்திரமேரூரில் பேரூராட்சி நிர்வாகத்தினர் நேற்று கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதில், பேரூராட்சி நிர்வாகத்தினர் காஞ்சிபுரம் சாலை, பி.டி.ஓ., அலுவலகம், வந்தவாசி சாலை, எண்டத்துார் சாலை, ஆனைபள்ளம், எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில், பல்வேறு கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த 40 கொடி கம்பங்களை அகற்றினர்.