சேதமடைந்த கால்வாய் தளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி, பல்லவன் தெரு -- ஒட்டக்கூத்தர் தெரு சந்திப்பு வழியாக ரயில் நிலையம், அசோக் நகர், மாமல்லன் நகர், மின்நகர், ஆனந்தாபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் மீது கனரக வாகனம் சென்றதால், கான்கிரீட் தளம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலை வளைவில் திரும்பும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஒட்டக்கூத்தர் தெருவில், உடைந்த நிலையில் உள்ள கான்கிரீட் தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.