சாலையில் குழாய் பதிக்க தோண்டிய மண் குவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலையோரம், குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதோடு, கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டையில் இருந்து மின் நகர் ஒட்டியுள்ள திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாய்யோரம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக, 10 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டிய உடனே பள்ளத்தில் குடிநீர் குழாய் பதிக்கவில்லை. பள்ளம் தோண்டியபோது எடுக்கப்பட்ட சகதியான மண் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் குவிக்கப்பட்டுள்ளதால், சாலையின் அகலம் குறைந்துள்ளது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மழை பெய்யும் போது சகதி கரைந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து சாலையில் இடையூறாக உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.