இருங்காட்டுக்கோட்டை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
இருங்காட்டுக்கோட்டை:இருங்காட்டுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கார், அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஏற்றிச் செல்லவும் தினமும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இவை தவிர தொழிற்சாலைகளுக்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான கற்கள், மணல்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் அதிக போக்குவரத்து கொண்ட சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், பின்னால் வரும் மற்ற வாகனங்கள் நிலை தடுமாறி மோதுவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் லாரி ஓட்டுநர்கள் மீது, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.