குன்றத்துாரில் கடும் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
குன்றத்துார்:பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், போரூர், பல்லாவரம் ஆகிய நான்கு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் இடமாக குன்றத்துார் நகராட்சி உள்ளது. குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் மற்றும் கந்தழீஸ்வரர், திருநாகேஸ்வரர், திருஊரக பெருமாள் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.இங்கு விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வழிப்படுகின்றனர். முகூர்த்த நாட்களில் குன்றத்துார் முருகன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால், ஒரே நேரத்தில் குன்றத்துார் நகரத்திற்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், குன்றத்துாரில் உள்ள பிரதான சாலைகள் இரு வழிச்சாலையாக குறுகலாக உள்ளன. இந்த சாலைகளில் இருபுறமும் உள்ள வணிக கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்துவதால், சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பீக் ஹவர்ஸ் நேரமான காலை 8:00 முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 முதல் 8:00 மணி வரை மிக கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் குன்றத்துார் நகரத்தில் உள்ள ஒரு கி.மீ.,சாலையை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால், பொதுமக்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், பீக் ஹவர்ஸ் நேரங்களில் கன ரக வாகனங்கள் குன்றத்துார் நகரத்திற்குள் வந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.