சேதமான களியனுார் காலனி சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
களியனுார்: களியனுாரில் சேதமடைந்த நிலையில் உள்ள காலனி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் காலனி சாலைக்கு, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 32 லட்சம் ரூபாய் செலவில், 800 மீட்டர் நீளத்திற்கு கடந்த ஆண்டு ஏப்., மாதம் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்த ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில், இச்சாலையில் சென்ற கனரக வாகனத்தால், சுடுகாடு அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.