காஞ்சியில் நேரு மார்க்கெட் ரூ.4.6 கோடியில் திறப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், ராஜாஜி மார்க்கெட்டுக்கு, 7 கோடி ரூபாயில், கடந்த 2022ல் துவங்கிய புதிய கட்டட பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்று அவை திறக்கப்பபட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.அதைத் தொடர்ந்து, 2023 மார்ச் மாதம் நேரு மார்க்கெட்டுக்கு 4.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் நேரு மார்க்கெட் கட்டுமான பணிகளும் மெத்தனமாக நடப்பதாக புகார்கள் எழுந்தன.நேரு மார்க்கெட் வியாபாரிகள் சாலையோரங்களில் தற்காலிகமாக வியாபாரம் நடத்துகின்றனர். தங்களுக்கு புதிய கட்டடம் எப்போது வழங்கப்படும் என, கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில், நேரு மார்க்கெட்டின் தரைதளத்தில், 80 கடைகள், கழிப்பறை, வாகன நிறுத்தம் போன்றவை கட்டி முடிக்கப்பட்டுள்ன. முதல் தளத்தை மாநகராட்சியின் வருமானத்தை அதிகப்படுத்த, வாடகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், மார்க்கெட் கடைகள் 80 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.பணிகள் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்தார். காஞ்சிபுரம் நேரு மார்க்கெட்டில் நடந்த திறப்பு விழா நிகழ்வில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்அடுத்த சில நாட்களில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு, மார்க்கெட் செயல்படும் என, மேயர் மகாலட்சுமி தெரிவித்தார்.