காஞ்சியை சுற்றிலும் புதிய சாலை திட்டங்கள் அதிகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளால் தொழில் வசதிகள் விரிவாகும்
காஞ்சிபுரம், சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு, ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக கிடைத்து வருகிறது.அந்த வகையில், சாலைகள் விஷயத்தில், அடுத்தடுத்து புதிய திட்டங்கள் வருவதாலும், ஏற்கனவே உள்ள சாலை திட்டங்கள் மேம்படுத்துவதாலும் தொழில் வளர்ச்சி மேலும் விரிவடைகிறது.அந்த வகையில், சட்டசபை பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், நெடுஞ்சாலை துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இடையே 250 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.இந்த தொழில் வழித்தடம், வாலாஜாபாத் அருகே அமையும் என்பதால், இந்த வழித்தடத்தால், காஞ்சிபுரம் சுற்றியுள்ள மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் பெரிதும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல, காஞ்சிபுரம் - செவிலிமேடு பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே உள்ள உயர்மட்ட பாலம் சேதமாகி வருவதால், புதிதாக 100 கோடியில், அதன் அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. விரைவில் இதற்கான அரசாணை எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்ததாக காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பாலாறு ஒட்டி புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், தன் அறிக்கையை, கலெக்டர் கலைச்செல்விக்கு அனுப்பியுள்ளார்.அதாவது, காஞ்சிபுரம் - செவிலிமேடு பாலாறையொட்டி துவங்கும் புதிய புறவழிச்சாலை, 13 கி.மீ., துாரம் சென்று வெண்குடி அருகே இணைய வேண்டும்.அங்கு ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்படும் புறவழிச் சாலையுடன் இச்சாலை இணைந்தால், சென்னைக்கும், செங்கல்பட்டு, கிளாம்பாக்கம், ஒரகடம் போன்ற இடங்களுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை இன்றி செல்ல முடியும். இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.காஞ்சிபுரம் மற்றொரு முக்கிய சாலையான, செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது. இதற்காக, 42 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கியுள்ளன.இத்திட்டங்கள் மட்டுமல்லாமல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. அதேபோல, சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் வே சாலையும் அமைகிறது.காஞ்சிபுரம் சுற்றிலும் புதிய மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும், சாலை விரிவாக்கமும், தொழில் வழித்தடங்களும் அமைவதால், காஞ்சிபுரம் மக்களுக்கு பெரிய அளவில் சாலை வசதிகள் எதிர்காலத்தில் கிடைக்க உள்ளன.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செவிலிமேடு பாலாறு புதிய பாலம் அமைப்பதற்கு, தொழில்நுட்ப தணிக்கை கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அதைத் தொடர்ந்து, பூர்வாங்க பணிகள் முடிந்தவுடன், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வந்துவிடும்.கீழம்பி - செவிலிமேடு புறவழிச்சாலை விரிவாக்கம் திட்டமும் வேகமாக நடக்கின்றன. விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.