உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் பரிசோதனைக்கு... ரூ.153 கோடியில் புதிய மையம்:அடுத்த மாதம் திறப்பால் தொழில்துறையினர் மகிழ்ச்சி

ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் பரிசோதனைக்கு... ரூ.153 கோடியில் புதிய மையம்:அடுத்த மாதம் திறப்பால் தொழில்துறையினர் மகிழ்ச்சி

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில், 153 கோடி ரூபாய் செலவில், மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை மைய கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. மையத்தை சிப்காட் நிர்வாகம் அடுத்த மாதம் திறக்க உள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாட்டில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவ தேவைகளும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு மாற்றாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளுக்கு குறைந்த செலவில், தரமான மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 350 ஏக்கரில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 350 வகையான மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மருத்துவ சாதனங்கள், பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின் சந்தை படுத்தப்படும். இதற்காக, சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு பரிசோதனைக்காக எடுத்து செல்ல வேண்டும். இதனால், பரிசோதனை மற்றும் தர சான்றினை பெற, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணவும், மக்களுக்கு தரமான உள்நாட்டு மருத்துவ சாதனங்கள் கிடைக்கச் செய்யும் வகையிலும், ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில், 153 கோடி ரூபாய் செலவில், மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதிநவீன குளிர்சாதன அறை, சேமிப்பு கிடங்கு, 3 டி பிரின்டிங், சி.என்.சி., இயந்திரம், நுண்ணுயிரியல் ஆய்வகம், கேளிபிரேஷன் மற்றும் காமா ரேடியேஷன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யும் வகையில், அதிநவீன இயந்திரங்கள் வசதியுடன், 2,200 சதுர அடியில் இந்த ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும், இ.எம்.ஐ., - இ.எம்.சி., எனப்படும் சிறப்பு பரிசோதனை ஆய்வக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்க, சிப்காட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தொழிற்துறையினர் கூறியதாவது: மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர், தங்கள் உற்பத்தி பொருட்களை இங்கு பரிசோதனை செய்து, எளிதாக சான்று பெற முடியும். அலைச்சலும், நேர விரயமும் ஏற்படுவது தடுக்கப்படும். அதோடு, செலவும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஒரகடம் சிப்காட் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிப்காட் நிர்வாகம் சார்பில், தனியார் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்கப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு, 2.05 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளுக்கு, ஏக்கர் 1.45 கோடி ரூபாய் என்ற குறைந்த விலையில் தரப்படுகிறது. அதேபோல, தனியார் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பராமரிப்பு கட்டணங்களில் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக, சிப்காட் வளாகம் தொழில் செய்ய, தனியார் நிறுவனங்களுக்கு வசதியான இடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

28 தொழிற்சாலைகள்

ஒரகடம் சிப்காட்டில் 3,500 ஏக்கரில் தொழிற் பூங்கா உள்ளது. இதில், மருத்துவ சாதனங்கள் தயாரிக்க, 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 28 தொழிற்சாலைகளுக்கு, 60 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு, 10 நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளை துவக்கியுள்ளன.

4 ஏக்கரில் மூலிகை பூங்கா

மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவில், 600 வகையான மூலிகை செடிகளை வளர்க்க, சிப்காட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, 4 ஏக்கரில் 2,000 வகையான மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த செடிகளில் இருந்து பெறப்படும் மூலிகைகள், மருந்து தயாரிக்க உபயோகப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை