புதிய வகை உழவு இயந்திரம்: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
காஞ்சிபுரம்: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், புதிய வகை உழவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து, கூரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேற்று செயல் விளக்கம் அளிக்கப்படடது. வேளாண்மை பொறியியல் துறை மூலம், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு விசை உழுவையால் இயக்கக்கூடிய புதியவகை உழவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து விவசாயிகளுக்கான செயல்விளக்கம் சிறுகாவேரிபாக்கம் வட்டாரம். கூரம் கிராமத்தில் நேற்று நடந்தது. இந்த புதிய வகை இயந்திரம் மூலம், விவசாயிகள் தங்களிடத்தில் உள்ள விசை உழுவையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் எளிய முறையிலும், விரைவாக குறித்த நேரத்தில் உழவு பணிகளை மேற்கொள்ள இயலும். இந்த இயந்திரத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறையை அதிக அளவு ஈடுசெய்ய முடியும். இந்த இயந்திரத்தின் மதிப்பீடு மற்றும் செயல்பாட்டு திறன் சோதனை பணிகள் நிறைவடைந்தவுடன் அதற்கு அரசு மானியம் வழங்க ஏதுவாக அரசு மானிய இயந்திர பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில், சென்னை, வேளாண்மை பொறியியல் துறையின் தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் சாந்தி சுந்தர்ராமன், சென்னை மண்டல கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட உதவி செயற் பொறியாளர் தமிழ்ச்செல்வம், வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் வி.எஸ்.டி.காமாட்சி பவர்டில்லர் ஏஜென்சிஸ் நிறுவனத்தார் பங்கேற்றனர்.