கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்
உத்திரமேரூர்: கடல்மங்கலத்தில் மண் அரிப்பால், புதிதாக அமைக் கப்பட்ட சாலை சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, கடல்மங்கலத்தில் தோட்ட நாவல் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி ஆலஞ்சேரி, பாலேஸ்வரம், குண்ணவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர், உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, சுற்று வட்டார கிராமங்களில் உள்ள, கல் குவாரிகளில் இயக்கப்படும் லாரிகளும் இவ்வழியே செல்கின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, ஓராண்டிற்கு முன் சேதமடைந்து இருந்தது. இச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 1.81 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையின் இருபுறமும், சரியாக மண் கொட்டி சீரமைக்காமல் விடப்பட்டுள்ளது. இதனால், 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின்போது, மூன்று இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரம் சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சேதமடைந்துள்ள சாலை பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் சேதமடைந்த தார்ச் சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.