பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லை காஞ்சியில் பயணியர் பரிதவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம் அருகே, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், கடந்த 2018 ம் ஆண்டு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் திறக்கப்பட்டது.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள், போக்குவரத்து ஊழியர்களும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குடிநீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் மையத்தில் தண்ணீர் குடிக்க வரும் பயணியர், தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இதனால், பணம் செலவழித்து கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் பயன்பாடின்றி வீணாகிறது.எனவே, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பயணியரின் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்தகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.