காஞ்சியில் 91 ஏரிகளை சீரமைக்க நிதி இல்லை தொழிற்சாலை பங்களிப்பு நிதி கிடைக்குமா?
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 91 ஏரிகளை சீரமைக்க நிதி இன்றி ஊரக வளர்ச்சி துறையினர் பரிதவித்து வருகின்றனர். தனியார் தொழிற்சாலைகளின் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி சீரமைக்க நிறுவனங்களை தேடும் பணியில் குழுவினர் களமிறங்கியுள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.இதில், 100 ஏக்கர் பரப்பளவிற்கு மேல், 381 ஏரிகள் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் நிரம்பும் நீரை பயன்படுத்தி, 50,000 ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயிகள் நெல், காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அதேபோல், 100 ஏக்கர் பரப்பளவிற்கு குறைவாக இருக்கும், 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் நிரம்பும் நீரில், 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல், காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.வட கிழக்கு பருவ மழைக்கு, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கும், ஏரிகளின் சீரமைப்புக்கு மாநில நிதிக்குழு மானியத்தில், 250 கோடி ரூபாய் மற்றும் மாநில அரசு நிதியாக, 250 கோடி ரூபாய் என மொத்தம், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.தமிழகம் முழுதும், அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்கள், சீரமைக்கப்படவிருக்கும் சிறிய மற்றும் பெரிய ஏரிகளின் விபரப்பட்டியலை பொறியாளர்கள் வாயிலாக சேரித்தனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 91 ஏரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளன. சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு கிடைக்கவில்லை.இது தவிர, தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களும் ஏரிகளை சீரமைக்க முன் வரவில்லை. மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டங்களிலும், ஏரி சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நடப்பு நிதி ஆண்டு முடிவதற்கு, ஒரு மாதமே கால அவகாசம் இருக்கும் நிலையில், எப்போது நிதி ஒதுக்கீடு செய்து, ஏரிகளை சீரமைக்கப்பட உள்ளது என, சமூக ஆர்வலர்கள் இடையே புலம்பல் எழுந்துள்ளது. மேலும், தாய் திட்டம் மற்றும் ஏரி குடிமராமத்து பணிகள் செய்த ஏரிகளும் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. இதுபோன்ற ஏரிகளை எப்போது சீரமைப்பது என, கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த நிதி ஆண்டில் மட்டும், 22 ஏரிகள் தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பு நிதியில் சீரமைக்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு, 91 ஏரிகளை சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளன. சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதி தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கு பிரித்தளிக்கவில்லை. காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால், தொழிற்சாலை பங்களிப்பு நிதியை பெற்று சீரமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.