உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3,224 சதுர அடி நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகள் 18,000 சதுர அடி ஆக்கிரமிப்பை அறிந்து அதிர்ச்சி

3,224 சதுர அடி நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகள் 18,000 சதுர அடி ஆக்கிரமிப்பை அறிந்து அதிர்ச்சி

சென்னை:அரசு நிலம் 3,224 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, மடிப்பாக்கத்தில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அடுத்தடுத்து 13 இடங்களில் 18,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தெரிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இதன் விரிவு பகுதியாக -ராம் நகர், பாகீரதி நகர்கள் உள்ளன. இங்கு 4,000 பேர் வசிக்கின்றனர்.பாகீரதி நகர் ஜெ.கே., சாலைக்கும், வேளச்சேரியிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் பிரதான பஜார் சாலைக்கும் இடையே, அரசுக்கு சொந்தமான, 3,224 சதுர அடி காலி இடத்தை, இருவர் ஆக்கிரமித்துள்ளதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலம், பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ் வருகிறது. சற்குணம் என்பவர் வசம் 1,144 சதுர அடியும், முருகா ஹார்டுவேர்ஸ் கடை நிர்வாகம் வசம் 2,080 சதுர அடியும் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 3 கோடி ரூபாய்.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டு, மடிப்பாக்கம் - -வேளச்சேரி பிரதான பஜார் சாலையும், ஜெ.கே., சாலையும் இணையும் விதமாக, ஓர் இணைப்பு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் இரு நிமிடங்களில் பிரதான பஜார் சாலைக்கு நடந்து செல்ல முடியும். 1 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.தவிர, இணைப்பு சாலை அமைத்தது போக, மீதமுள்ள இடத்தில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கலாம்.கடந்த 1973ல், பாகீரதி நகர் வரைபடத்தில், மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக 30 அடி அகலம் உள்ள பாதை, புழக்கத்தில் உள்ள சாலை என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், மேற்கு எல்லை தற்போது, சீனிவாசன் நகர் பிரதான சாலையாக, பஜார் சாலையுடன் இணைந்தபடி உள்ளது. ஆனால், கிழக்கு எல்லையில் சாலை என, வரையறுக்கப்பட்டுள்ள 30 அடி அகல பாதை, இரு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடத்தை சுற்றிலும் மதில் சுவர் மற்றும் தகர கூரை அமைக்கப்பட்டுள்ளது.இருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 3,224 சதுர அடி இடத்தை மீட்டு, அதில் இணைப்பு சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கலெக்டர், தாசில்தார் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானதன் எதிரொலியாக, அவ்விடத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும் தொடரக்கூடாது என, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் இருவருக்கும், 2020ல் மாவட்ட வருவாய் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. பின், 2022ல் இடத்தை காலி செய்யும்படி, தாசில்தார் உத்தரவிட்டார். அரசியல் பின்புலம் காரணமாக, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே அவர்கள் வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சமூக ஆர்வலர் மாதவன், 59, கூறியதாவது:'தினமலர்' தொடர் செய்தி எதிரொலியாக, வருவாய்த் துறை சார்பில் நில அளவையர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் பழைய ஆவணங்களை வைத்து, சமீபத்தில் ஆய்வு செய்தனர்.அதில், பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ், அதே பகுதியில் வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என, கூடுதலாக 18,000 சதுர அடி பரப்புள்ள 13 இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு 18 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.வருவாய்த் துறையினர் கூறியதாவது:பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ், 3,224 ச.அடி பரப்பு ஆக்கிரமிப்பு இடத்தை மட்டுமே பழைய ஆவணங்கள் வைத்து அளவீடு செய்தோம். ஆனால், அந்த சர்வே எண்ணில், கூடுதலாக 18,000 சதுர அடி பரப்பு அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சர்வே எண்: 664ல், சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.இது சம்பந்தமான அறிக்கையை, மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்துவிட்டோம். அவரது முடிவுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி