ஒரகடம் தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுார்: வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் ஒரகடம் தீயணைப்பு நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்ட, சிப்காடிற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட் தொழில்பூங்காவில் 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் குடியுருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனை, உணவகம், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவையும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், 15 கி.மீ., துாரம் உள்ள ஸ்ரீபெரும்பதுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, ஒரகடம் வருவதற்கு தாமதமாவதால், மீட்பு பணியில் தொய்வு, பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட்டு வந்தது. ஒரகடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகையில், கடந்த ஆண்டு வாடகை கட்டடத்தில், புதிய தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது. இந்த நிலையில், ஒரகடம் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, ஒரகடம் சிப்காட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதை, தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால் நேற்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து, ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற, தனியார் தொழிற்சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில், தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், தீயணைப்புத் துறை அதிகாரிகள், சிப்காட் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.