பெருநகரில் வார சந்தை துவக்கம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெருநகர் கிராமம். இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர. பெருநகரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.இப்பகுதியினர், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க, உத்திரமேரூர் அல்லது காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை இருந்தது.இதனால், நேரம் விரயம் மற்றும் போக்குவரத்து செலவு போன்றவற்ற தவிர்க்க தங்கள் கிராமத்தில் வார சந்தை ஏற்படுத்த நீண்ட காலமாக கோரி வந்தனர். அதன்படி, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, மாலை 3:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அப்பகுதியில் வார சந்தை செயல்பட ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.இதையடுத்து, அப்பகுதி பிரதான சாலையோரம், குளக்கரை பகுதியில் நேற்று முன்தினம் வார சந்தை துவங்கப்பட்டது.இதன் வாயிலாக, சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை இங்கு விற்பனை செய்ய வழி வகுப்பதோடு, பெருநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் அலைச்சல் இல்லாமல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் பெற வழிவகை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.