உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய வீடு, வணிக கட்டடங்களை கணக்கெடுக்க... உத்தரவு ஊராட்சிகளின் வரி வருவாயை பெருக்க திட்டம்

புதிய வீடு, வணிக கட்டடங்களை கணக்கெடுக்க... உத்தரவு ஊராட்சிகளின் வரி வருவாயை பெருக்க திட்டம்

காஞ்சிபுரம்: ஊராட்சிகளின் வரி வருவாயை பெருக்கும் வகையில், புதிய வீடுகள், வணிக கட்டடங்களை கணக்கெடுத்து, ஊராட்சி வரியின இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும்படி, அதிகாரிகளுக்கு, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர், தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் வசூலித்து வருகின்றன.குடியிருப்பு வாசிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், அனைத்து வரிகளையும் ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் நடைமுறை, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.பெரும்பாலான ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விதமான வரிகளை, அரையாண்டுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ செலுத்தலாம்.புதிதாக உருவாகி வரும் நகர்களில், ஊராட்சி நிர்வாகங்கள் இனம் கண்டு புதிய வரி வசூலிப்பதில்லை. இதனால், ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டி பல லட்ச ரூபாய் வரி வருவாயை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்க, ஊரக வளர்ச்சி ஆணையர் சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.உத்தரவில் கூறியிருப்பதாவது:ஊராட்சிகளில் விடுபட்டுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கண்டறிந்து, சொத்து பதிவேட்டில் பதிவேற்ற வேண்டும்.இந்த பணிக்கு, அந்தந்த ஊராட்சி செயலர்கள், ஊராட்சி பணியாளர்கள், ஒன்றிய பணியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களை கட்டாயமாக சேர்த்து, வரி வசூலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரக வளர்ச்சி ஆணைய உத்தரவுப்படி, புதிதாக உருவான நகரில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வரி விதிப்புக்குள் கொண்டு வரும் வகையில், புதிய வழிகாட்டி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.வரி கேட்பு விபரங்களை, ‛விபி டேக்ஸ்' தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்டு, வரி வசூல் செய்யப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.இதை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர் மற்றும் தணிக்கை ஆகியோர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த முயற்சியால், ஊராட்சிகளுக்கான வரி வருவாய் நிச்சயம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு வரி வசூல் (கோடி ரூபாயில்)

வரியினங்கள் இலக்கு வசூல்குடிநீர் 9.16 1.95பிற வரியினங்கள் 47.04 32.39


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை