மேட்டுக்குப்பம் சாலை வேகத்தடைக்கு வர்ணம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் மேட்டுக்குப்பம் - பெரும்பாக்கம் சாலை வழியாக முசரவாக்கம், திருப்புட்குழி, கீழ்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம், கூத்திரமேடு, பாலுசெட்டிசத்திரம், சங்கரன்பாடி, களத்துார் உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் உள்ள முக்கிய மும்முனை, நான்கு முனை மற்றும் பள்ளி அருகே விபத்தை தவிர்க்கும் வகையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்தறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ‛பெஞ்சல்' புயல் மற்றும் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, வேகத்தடையின் மீது அமைக்கப்பட்ட வெள்ளை நிற வர்ணம் அழிந்தது. இச்சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து, காஞ்சிபுரம் உட்கோட்டம் பராமரிப்பு மற்றும் கட்டுமானம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், மேட்டுக்குப்பம்- - பெரும்பாக்கம் சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளுக்கும் வெள்ளை நிற வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.