நெல்லுக்கு பணம் கிடைக்காதால் விவசாயிகள் கவலை ஊராட்சி தலைவரின் பேச்சால் சர்ச்சை
உத்திரமேரூர்:விற்பனை செய்த நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லை என, விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில், மருத்துவன்பாடி ஊராட்சி தலைவரின் தரக்குறைவான பேச்சு சர்ச்சையாகி உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் பொது குளம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நவரை பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர். அதில், சில விவசாயிகளுக்கு இன்னமும் நெல் விற்பனை செய்த பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் வராமல் கவலையில் உள்ள நிலையில், மருத்துவன்பாடி ஊராட்சி தலைவர் விவசாயிகளிடம் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சென்ற ஊராட்சி தலைவர் வெங்கடேசனிடம், நெல்லுக்கு பணம் வராதது பற்றி விவசாயி ஒருவர் கேட்டபோது, அதற்கு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்த பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்காக, சம்பந்தப்பட்ட துறை மாவட்ட அலுவலரிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு அனைத்து பணமும் விடுவிக்கப்படும் என்று கொள்முதல் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.நான் பேசியதாக வெளியான வீடியோவில் விவசாயியை நான் எந்த இடத்திலும் தரக்குறைவாக பேசி திட்டவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.