உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொடரும் காலி பணியிடத்தால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்

தொடரும் காலி பணியிடத்தால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளதால், தாங்கள் கூடுதல் பணி உள்ளிட்ட பல்வேறு இன்னலுக்கு ஆளாவதாக ஊராட்சி செயலர்கள் பலரும் புலம்புகின்றனர்.ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், வீட்டு வரி, சொத்து வரி, குழாய் வரி உள்ளிட்டவை வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்களை சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளையும் ஊராட்சி செயலர்கள் மேற்கொள்கின்றனர்.இவ்வாறு, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களின் பணி முக்கியமானதாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் பணியிடம், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளது. குறிப்பாக உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 23 ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் இல்லாத நிலை தொடர்கிறது.காலியாக உள்ள இந்த ஊராட்சிகளுக்கு, அருகாமையில் உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதலாக கவனிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால், ஊராட்சி செயலர்கள் கூடுதல் பணி காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக புலம்புகின்றனர்.ஒரு செயலர், இரு ஊராட்சிகளை கவனிப்பதால், பணி சுமை ஏற்படுவதோடு ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளும் முறையாக செய்யப்படாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரே ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊராட்சி செயலர்கள், கடந்த ஆண்டு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், 3 ஆண்டுகளாக காலியாக உள்ள ஊராட்சி செயலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இதனால், ஒரு ஊராட்சி செயலர், இரு ஊராட்சிகளுக்கு வந்து ஒட்டுமொத்த பணிகளை நிர்வாகிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.ஊராட்சிகளில், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் அரசு சார்ந்த பணிகள் குறித்தும் ஊராட்சி செயலரிடம் உடனடியாக நேரடியாக ஆலோசிக்க இயலவில்லை என, காலி பணியிட ஊராட்சிகளைச் சேர்ந்தோர் பலரும் புலம்பி வருகின்றனர்.எனவே, காலியாக உள்ள ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்களை பணியமர்த்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை