உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஸ் நிலையத்தில் தொடரும் சாலை, கழிப்பறை பிரச்னை மாநகராட்சி பராமரிக்காததால் பயணியர் அவதி

பஸ் நிலையத்தில் தொடரும் சாலை, கழிப்பறை பிரச்னை மாநகராட்சி பராமரிக்காததால் பயணியர் அவதி

காஞ்சிபுரம்:ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்புகள், சாலை பழுது, கழிவுநீர் தேக்கம், திருநங்கையர் தொல்லை போன்ற பிரச்னைகளால், பயணியருக்கு தொல்லை அதிகரித்து வருகிறது. பேருந்து நிலையத்தை, மாநகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் பயணியர் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அன்றாடம் அரசு, தனியார் என, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு, 10,000 பேர் வரை, பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் பயணியருக்கு தேவையான வசதிகளோ அல்லது பாதுகாப்போ இல்லாததால், ஆயிரக்கணக்கான பயணியர் பேருந்து நிலையத்துக்கு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. பல கடைகள் சாலையிலேயே இயங்குவதால், பாதசாரிகளால் நடக்கக்கூட இடமில்லாத நிலை நீடிக்கிறது. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். நாள் முழுதும் இந்த வாகனங்கள் அங்கேயே நிற்பதால், மேலும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பேருந்து நிலையத்தின் சாலை முழுதும் பழுதாகி, ஏராளமான இடங்கள் பள்ளங்களாக உள்ளன. புதிதாக கட்டியுள்ள தகரத்தால் ஆன, பெரிய அளவிலான நிழற்கூரை அருகே, அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் வெளியூர், வெளிமாநில சுற்றுலா பயணியர் முகம் சுழிக்கின்றனர். பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், ஆக்கிரமிப்புகள் இன்றியும் பராமரிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணியரிடம், திருநங்கையர் பிரச்னை நீடிக்கிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மூலதன மானிய நிதி திட்டத்தில், 70 லட்ச ரூபாய்க்கு மேலாக செலவிடப்பட்டு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், பேருந்து நிலையத்தின் சாலை, தரை என, பெரும்பாலான இடங்கள் படு மோசமாக உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை சீரமைக்க லட்சக்கணக்கில் செலவிடுவதாக தெரிவிக்கிறது. ஆனால், அங்குள்ள சாலை படுமோசமான நிலையில் உள்ளன. கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை பழுது, ஆக்கிரமிப்புகள் ஆகியவை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் கமிஷனரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ