இதய மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு காஞ்சி அரசு மருத்துவமனையில் அவலம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், எட்டு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு வெளி மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்படுவதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோர், பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.பற்றாக்குறை
ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப நவீன பிரசவ கட்டடம், ஆண், பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் மேம்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.தவிர, மாவட்ட அளவிலான தலைமை மருத்துவமனைகளில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்ப்பது என, பல்வேறு வகையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் வகித்து வருகிறது.இருப்பினும், பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.இந்த மருத்துவமனையில், மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர்கள், மருந்தாளர்கள் என, 63 வகையான பணியிடங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான பணியிடங்களுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் மட்டுமின்றி, துறை ரீதியான ஊழியர்களும் புலம்புகின்றனர்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 81 மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இதில், எட்டு பணியிடங்கள் காலியாக உள்ளன. 140 செவிலியர் பணியிடங்களில், நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.பல்வேறு தொழில் நுட்ப பிரிவுகளிலும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.உதராணமாக, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில், இதய நோய்க்கு சிறப்பு மருத்துவர் இல்லை. ஏற்கனவே இருந்த இதய நோய் சிறப்பு மருத்துவர் பணியிடம், கடந்த பிப்ரவரி மாதம் காலியானது. அதன் பின், வேறு யாரும் அங்கு நியமிக்கப்படவில்லை.நோயாளி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால், காஞ்சிபுரம் மருத்துவமனையில் முதலுதவி செய்து, செங்கல்பட்டு, சென்னையில் செயல்படும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டிய நிலை உள்ளது.சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை நிர்வாகம், காலியாக இருக்கும் சிறப்பு மருத்துவ பிரிவு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நடவடிக்கை
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற நோயாளிகள் கூறியதாவது:நெஞ்சு வலி என, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தால், இங்கு அடிப்படை பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது.அதற்குரிய காரணம் என்ன என்பதை கண்டறிய முடியவில்லை. இங்கு, இதயம் சார்ந்த மருத்துவர் இல்லாததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதை தவிர்க்க இதய மருத்துவரை நியமிக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு பிரிவுக்கும் சிறப்பு மருத்துவர் என, கல்லுாரியுடன் கூடிய மருத்துவமனைகளில் மட்டுமே நியமனம் உள்ளது.இங்கு, பொது மருத்துவர் மட்டுமே நியமிக்கப்படுகிறார். அதன்படி, எட்டு மருத்துவர்கள் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அந்த பணியிடங்களும் விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.