உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், பெட்ரோல் பங்க், தனியார், அரசு வங்கி, நிதி நிறுவனம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு நிதி நாடும் பள்ளி, நகை, வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, மண்பாண்டம், உரம், விதை விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்துகள் காமராஜர் வீதி வழியாகவே சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என, சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சாலையில் உள்ள கடைகாரர்கள் தங்களது கடைகளை நடைபாதையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால், இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், தாலுகா அலுவலகம், வணிகர் வீதி சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்குகின்றனர். எனவே, காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினரும், சிவ காஞ்சி போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை