கட்டவாக்கம் ஏரியில் மண் எடுக்க அனுமதி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலான 160 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அந்த தண்ணீரைக் கொண்டு, அப்பகுதியில் உள்ள, 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.இந்நிலையில், கட்டவாக்கம் ஏரி, பல ஆண்டுகளாக துார்வாராததால், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி துார்ந்து, ஏரிக்கரையொட்டி பல வகையான செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது.இதனால், மழைக்காலத்தில் ஏரியில் முழு கொள்ளளவிற்கான தண்ணீர் சேகரமாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.எனவே, இந்த ஏரியை துார்வாரி பராமரிக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன் தொடர்ச்சியாக கட்டவாக்கம் ஏரியில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,கட்டவாக்கம் ஏரியில், 21,000 கன மீட்டர் அளவிற்கு சாதாரண மண் அகற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அப்பகுதி வி.ஏ.ஒ., அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.ஆட்சேபனையற்றது தொடர்பான வருவாய்த் துறையின் கடிதம் கிடைக்கப் பெற்றதும் மண் எடுக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.