உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செய்யாறு சிப்காட் ஆறுவழி சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த தடைகோரி மனு

செய்யாறு சிப்காட் ஆறுவழி சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த தடைகோரி மனு

வாலாஜாபாத்: செய்யாறு சிப்காட் ஆறுவழிச் சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த தடைக்கோரி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அரும்புலியூர், சீத்தாவரம் விவசாயிகள் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, செய்யாறு சிப்காட் - சென்னையை இணைக்கும் வகையில் ஆறுவழிச் சாலை அமைக்க அரசு உத்தேசித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாத்தணஞ்சேரி, அரும்புலியூர், பழவேரி, சிறுதாமூர், ஆனம்பாக்கம், காட்டாங்குளம், மலையாங்குளம், அழிசூர், மணல்மேடு, ஒழுகரை, சிலாம்பாக்கம், இளநகர், பெருநகர் உள்ளிட்ட கிராம விவசாய நிலங்கள் வழியாக இந்த ஆறுவழிச் சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், இப்பகுதிகளில் ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்ற நீர்நிலைகள் மற்றும் பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கான மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் பசுமை மரங்களும் பாதிக்கப்படும். ஏற்கனவே, 2019ல், இக்கிராமங்கள் வழியாக எட்டுவழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது, விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அதே நிலங்கள் வழியாக ஆறுவழிச் சாலை அமைப்பதை அனுமதிக்கக்கூடாது. எனவே, நீர்நிலை மற்றும் விவசாய நிலங்கள் வழியாக செய்யாறு சிப்காட் ஆறுவழிச் சாலை அமைக்க தடை விதித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ