உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்ய பிரதமருக்கு மனு

காஞ்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்ய பிரதமருக்கு மனு

காஞ்சிபுரம்:'காஞ்சிபுரத்தை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் பெர்ரி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முக்கியமான நகரங்களின் அடிப்படை வசதியை மேம்படுத்த, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, 2015ல் மத்திய அரசு கொண்டு வந்தது. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மத்திய அரசு 500 கோடி ரூபாயும், மாநில அரசு 500 கோடி ரூபாயும் ஒதுக்கி, மொத்தம், 1,000 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கனவே, திண்டுக்கல், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருப்பூர், வேலுார் உள்ளிட்ட 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், நாட்டின் புகழ்மிக்க நகரமான காஞ்சிபுரத்தை, 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் தேர்வு செய்யவில்லை. இங்குள்ள பிரசித்திபெற்ற கோவில்களுக்கும், பட்டு சேலை வாங்கவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், மாநகராட்சி விரிவாக்கத்தால், சுற்றியுள்ள புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு, பெரிய மாநகராட்சியாக மாறியுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற காஞ்சி நகரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்து அறிவித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !