பொன்னியம்மன் கோவில் கலசம் திருட்டு
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு அடுத்த, பூண்டி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூண்டி பகுதியைச் சேர்ந்த பூசாரி கோபால் என்பவர் வெள்ளிக்கிழமைதோறும் பூஜை செய்து வருகிறார்.இந்த நிலையில், பூசாரி கோபால் வழக்கம்போல் பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டிருந்த ஒற்றை கலசம் காணாமல் போயிருப்பதை கண்டார்.இது குறித்து ஒரகடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியில் அமைந்துள்ள இக்கோவிலில், கடந்த ஆண்டு இதே போல, கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ரேடியோ ஆம்ப்ளிபயரை திருடி சென்ற நிலையில், தற்போது, கோவில் கலசம் திருடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.