உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பேரூராட்சி உதவி இயக்குனர் மீதான புகார் விசாரணைக்கு முதன்மை செயலர் உத்தரவு

பேரூராட்சி உதவி இயக்குனர் மீதான புகார் விசாரணைக்கு முதன்மை செயலர் உத்தரவு

காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதா மீதான புகார் குறித்து, ஆய்வு அறிக்கை அளிக்குமாறு, பேரூராட்சிகள் இயக்குனருக்கு, அரசு முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனராக பணிபுரிபவர் லதா. திருவள்ளூர் மண்டலத்திற்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.பேரூராட்சிகள் இயக்குனரகத்தில், கடந்த 2017ல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, அரசிடம் முறையான அனுமதி பெறாமல், அதே ஆண்டு டிச., 20ம் தேதி, டிஎன் 14 எம் 7828 என்ற பதிவெண் கொண்ட காரை, அவரது பெயரில் வாங்கியதாக, அவர் மீதான குற்றச்சாட்டு எழுந்தது.தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகள், '17ஆ' விதியின்கீழ், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் நலன் சங்க மாநில செயலர் பெரியசாமி, கடந்த ஜூலை 16 மற்றும் ஆக., 28ம் தேதிகளில், அரசிடம் மனு அளித்தார்.இந்த புகார் குறித்து விசாரித்து, ஆய்வு அறிக்கை அளிக்குமாறு, அரசு முதன்மைச் செயலர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குனருக்கு, கடந்த மாதம் 10ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடந்து வருகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் நலன் சங்கத்தினர் கூறியதாவது:காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதா, இயக்குனரகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, அரசு அனுமதி பெறாமல் கார் வாங்கியது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். விசாரணை நடக்கிறது.திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளில், செயல் அலுவலராக பணியாற்றிய போதும், உதவி இயக்குனராக பணியாற்றும் தற்போதும், பல கோடி ரூபாய் ஊழல் செய்தது தெரிந்தது.அதுமட்டுமின்றி, அரசு நிதியை கையாடல் செய்தது, இரண்டு கார்கள், விவசாய நிலம் வாங்கியும், பணிப் பதிவேட்டில் குறிப்பிடாதது, அவருக்கு இணை இயக்குனர் பதவி உயர்வு அளிக்க, விதிகளை தளர்த்த முயற்சிப்பது உள்ளிட்டவற்றுக்கு, அரசு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து, சங்கத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ