மேலும் செய்திகள்
முதியவர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு
17-Feb-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், சித்தமல்லி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில், யாராவது இறந்தால், மருதம் செல்லும் சாலையோரம் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர்.இந்நிலையில், சித்தமல்லி கிராமத்தில் வசித்து வந்த பெருமாள், 95, என்பவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பின், நேற்று காலை, அப்பகுதியினர் பெருமாளின் உடலை, சித்தமல்லி சுடுகாட்டிற்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.அப்போது, உத்திரமேரூர் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து, சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய அனுமதி இல்லை என கூறினர்.மேலும், சித்தமல்லி சுடுகாடு அமைந்துள்ள இடம் கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த, தனி நபர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது என, வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எட்டு தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறி வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி, துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரசுப்ரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி உடலை அடக்கம் செய்ய வழியில்லை என்று அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடம் கூறப்பட்டது.இதையடுத்து, அதே கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இது குறித்து கிராமத்தினர் கூறியதாவது:சித்தமல்லி கிராமத்தில், 100 ஆண்டுக்கும் மேலாக இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம். இப்போது, தனி நபர் ஒருவருக்கு சுடுகாடு உள்ள நிலம் சொந்தம் என்று கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.எனவே, சுடுகாட்டு நிலத்தை எங்களுக்கு மீட்டு தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
17-Feb-2025