மக்காச்சோளம் சாகுபடிக்கு விதை வழங்கி ஊக்குவிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை வட்டார விவசாயிகளுக்கு, மக்காச்சோளம் விதைகளை வழங்கி சாகுபடி செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஐந்து விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்; ஏழு விவசாயிகளுக்கு பவர் டில்லர்; 10 நபர்களுக்கு கூட்டுறவு கடன் என, 22 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், படப்பை வட்டாரத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு தலா ஐந்து கிலோ மக்காச்சோள விதைகள் என 10 கிலோ விதைகளை வழங்கி, மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேண்டும் என, விவசாயி களை ஊக்குவித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்: விவசாயி பெருமாள், உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுற்றியுள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. யூரியா இருக்கும் சில இடங்களில், கூடுதல் விலை கொடுத்து பிற உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்குகின்றனர். நேரு, காஞ்சிபுரம்: கூட்டு றவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் உரம் வழங்கவில்லை. கலைச்செல்வி, கலெக்டர்: கூட்டுறவு துறையினரிடம் கூறி, அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருமாள், உத்திரமேரூர்: காட்டுப்பன்றிகளால், கரும்பு விவசாயம் பாதிக்கப்படுகிறது. காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க குழு அமைக்கப்படும் என, வனத்துறையினர் உறுதியளித்தனர். ஒரு மாதமாகியும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மாணிக்கவாசகம், வனசரகர்: செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வன அலுவலரின் ஒப்புதல் பெற்று பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைச்செல்வி, கலெக்டர்: நீங்கள் ஒரு மாதமாக இதே பதிலை தான் கூறி வருகிறீர்கள். உங்கள் திட்டம் தான் என்ன என கூறுங்கள். மாணிக்கவாசகம், வனசரகர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 இடங் களில் காப்பு காடுகள் உள்ளன. அங்கு, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு பன்றிகளை சுடுவதற்கு தடை உள்ளது. பன்றிகளை சுட்டுப்பிடிக்க குழு அமைக்க வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் பன்றிகளை சுட நியமிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை வாசித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.