உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராகு, கேது பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மாகாளேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை

ராகு, கேது பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மாகாளேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மேற்கு ராஜகோபுரத்தின் பின்புறம், பழமையான மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது நவக்கிரஹ பரிகார ஸ்தலமான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில், ராகு, கேது, சிவபெருமானுடன் உள்ள திருக்கோல காட்சி அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒன்பது நவக்கிரஹங்களுக்கும் தனித்தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தம்பதி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.மேலும், இக்கோவிலில், ராகு, கேது பகவானுக்கு தனித்தனி சன்னிதி, அமைந்துள்ளதால், ராகு, கேது பெயர்ச்சியின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரகதோஷ பரிகார நிவர்த்திக்காக வந்து, வழிபட்டு செல்கின்றனர்.அதன்படி நேற்று, மாலை, 4.20 மணியளவில், ராகு பகவான், மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கும், கேது பகவான், கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகினர். இதையொட்டி, கிரக தோஷ நிவர்த்திக்காக, நேற்று காலையில் இருந்தே கோவில் வளாகத்தில், சிறப்பு பரிகார ஹோமங்களும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள், கேது பகவானுக்கு, அகல் விளக்கின் கீழ், கொள்ளு தானியத்தை பரப்பி, எள் எண்ணெயில் தீபமேற்றியும், ராகு பகவானுக்கு, கருப்பு உளுந்தின் மீது அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் தீபமேற்றி பரிகார பூஜை செய்தனர். மூலவர் மாகாளேஸ்வரருக்கு லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாட்டை செயல் அலுவலர் கேசவன், தக்கார் உதவி ஆணையர் கார்த்திகேயன், ஆய்வர் அலமேலு, அர்ச்சகர்கள், கோவில் பணியளர்கள் இணைந்து செய்திருந்தனர்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் உபகோவிலான செவிலிமேடு ஏரிக்கரையில் அமைந்துள்ள ராகு, கேது பரிகார ஸ்தலமான கைலாசநாதர் கோவிலில், நேற்று ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.இதில், ராகு, கேது சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடும், ராகு கேது பகவானுக்கு கலஷாபிஷேகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ