சித்தாத்துார் மயானத்திற்கு பாதை வசதிக்கு கோரிக்கை
வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியம், இளையனார்வேலுார் ஊராட்சிக்கு உட்பட்டது, சித்தாத்துார் கிராமம்.சித்தாத்துாரில் உயிர் நீத்தோர் சடலங்களை அடக்கம் செய்யும் மயானமாக, அப்பகுதி செய்யாற்றங்கரையின் ஒரு பகுதியை, நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.கிராம பகுதியில் இருந்து மயானத்திற்கு, ஒரு கி.மீ., துாரம் உள்ள நிலையில், இதுவரை பாதை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், ஆற்றங்கரையோரம்வழியாக சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்ல, வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும், சித்தாத்துார் மயானத்தில் தண்ணீர், எரிமேடை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.எனவே, சித்தாத்துார் மயானத்திற்கு சென்றுவர வசதியாக, பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.