பெருநகரில் சாலையோர குளத்துக்கு தடுப்புகள் அமைக்க கோரிக்கை
உத்திரமேரூர்: -பெருநகரில் சாலையோர குளத்துக்கு தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரக வளர்ச்சி துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில் உள்ள நீர்நிலைகளில், வாகனங்கள் பாய்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க, நீர்நிலைகளை ஒட்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சாலையில் நிலைத் தடுமாறி நீர்நிலையில் பாயும் வாகனங்கள், இரும்பு தடுப்பில் மோதி சாலையிலே நிற்பதால் விபத்துகள் வெகுவாக குறையும். இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் உள்ள களியாம்பூண்டி சாலையில் இருந்து, மானாம்பதி சாலை பிரிந்து செல்லும் இடத்தில், பொது குளம் ஒன்று சாலையோரத்தில் உள்ளது. இந்த குளத்தை ஒட்டி தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, பெருநகரில் மானாம்பதி சாலையை ஒட்டி உள்ள குளத்து பகுதியில், தடுப்புகள் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.