உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் அமைக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, காவாம்பயிர் ஊராட்சியில் புத்தளி, இருமரம், செம்புலம், உச்சிகொள்ளைமேடு, அப்பையநல்லூர், காவாம்பயிர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.அவ்வாறு அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய சிரமப்பட்டு வருகின்றனர்.மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தற்போது, உத்திரமேரூர் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.அதேபோல, செம்புலம் கிராமத்திலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:காவாம்பயிர் ஊராட்சியில் உள்ள செம்புலம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையம் திறக்க, மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஆனால், இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால், அறுவடை செய்த நெல்லை நீண்ட தூரம் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.எனவே, செம்புலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ